இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களிடையே எய்ட்ஸ் (HIV/AIDS) தொற்று பரவியுள்ள அதிர்ச்சிக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TSACS) சமீபத்திய அறிக்கையின் படி, தற்போது வரை 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது வரலையில் ஒரே மாநிலத்தில் மாணவர்களுக்கு இடையே இவ்வளவு அதிக எண்ணிக்கையில் எய்ட்ஸ் பரவியிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
TSACS மற்றும் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, மாணவர்கள் ஒரே ஊசியைப் பகிர்ந்து கொண்டு போதைப்பொருள் செலுத்தியதுவே, இந்த பரவலுக்குப் பிரதானக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், பெற்றோர் அரசு வேலைபார்ப்பவர்களாகவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்திய பெற்றோர், போதைப் பழக்கத்தை உணர முடியாமல் போயிருக்கிறார்கள்.
மாநிலத்திலுள்ள 220 பாடசாலைகள் மற்றும் 24 கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் இந்த சோகமான நிலை தெளிவாகியுள்ளது.
164 அரசு மருத்துவ மையங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சை (ART) வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாநிலம் மற்றும் மத்திய அரசு இணைந்து, விழிப்புணர்வு பிரச்சாரம், ஆலோசனை மையங்கள், சோதனை முகாம்கள் என பன்முக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
முன்னாள் மருத்துவரும் தற்போதைய முதலமைச்சருமான மாணிக் சாஹா, இந்த நெருக்கடியை சமாளிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதியளித்துள்ளார்.
இளைய தலைமுறையை காப்பாற்ற போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் ஏற்பட்ட இந்த நிலை, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பெரும் எச்சரிக்கையாகவும், கல்வி, விழிப்புணர்வு, மற்றும் சுகாதாரத்துக்கான முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் உள்ளது