Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலயத்தை மாதிரிப் பாடசாலையாக மாற்ற பாடசாலை சமூகத்துக்கு உதுமாலெப்பை எம்.பி. அழைப்பு

Posted on August 13, 2025 by Admin | 84 Views

(அபூ உமர்)

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலயத்தை ஆரம்பக் கல்வியின் மாதிரிப் பாடசாலையாக மாற்றும் திட்டங்களை இப்போதே பாடசாலை சமூகம் முன்னெடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

இக்றஃ வித்தியாலயத்தின் சிறந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட “இக்றஃவின் மணி மகுடம் சூடும் முத்துக்கள்” என்ற நிகழ்வானது அட்டாளைச்சேனை ஹனீபா ஹாஜியார் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி எம். எச். எம். சிராஜ் தலைமையில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போதே உதுமாலெப்பை எம்பி அவ்வாறு உரையாற்றினார்.

அக்கரைப்பற்று கல்வி வலயம் இன்று தேசிய ரீதியில் பெருமைக்குரிய சாதனைகள் படைத்துள்ளதாகக் கூறிய உதுமாலெப்பை எம்பி, கடந்த காலத்தில் வளங்களும், அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலிருந்து, இன்று அரசியல் தலைவர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகங்களின் ஒற்றுமை முயற்சியால் முன்னேற்றம் கண்டுள்ளதாக பாராட்டினார்.

பாடசாலை அபிவிருத்திக்காக பிரதேச மக்களுடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பழைய மாணவர்களும் இணைந்து கல்வித் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் எனவும், அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைவரும் கல்வி முன்னேற்றத்தில் பங்காற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து அரசியல்வாதிகள் யாரும் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என பிரதமர் அறிவித்தார். அதனால் அரசியல்வாதிகள் பாடசாலை வைபவங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டனர். அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். பிரதமராகிய நீங்களும், சபாநாயகர், ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் பாடசாலை வைபவங்களில் கலந்து கொள்கின்றீர்கள் எனவே, ஆளும்கட்சித் தரப்பினருக்கு ஒரு நியாயம் எதிர்கட்சித் தரப்பினருக்கு ஒரு நியாயமா? என்ற கேள்வியை பிரதமரிடம் எழுப்பிய போது அதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,
அரசியல்வாதிகள் பாடசாலை வைபவங்களில் கலந்து கொள்வது குறித்து எந்தவிதமான தடையுமில்லை எனவும் இது தொடர்பாக கல்வி சுற்றுநிருபங்களும் அனுப்பப்படவில்லை எனவும், இப்போது எல்லோரும் பாடசாலை வைபவங்களில் கலந்து கொள்ளலாம் என பதிலளித்தார். அதனையடுத்தே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு முதலாவது பாடசாலையாக இந்த அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலய வைபவத்தில் கலந்து கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்