புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் கீழ் செயல்படும் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வருடாந்திர தேசிய மீலாதுன் நபி தினம் வருகிற செப்டம்பர் 05ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட போலான கிராம மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டமானது கடந்த 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ், முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் அரச அதிகாரிகள், போலான மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று, நிகழ்வு நடைபெறவுள்ள இடத்தை பார்வையிட்டு, தேவையான ஏற்பாடுகள் குறித்து நேரடி ஆய்வுகளை மேற்கொண்டனர்.