Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

ரணில் விக்கிரமசிங்கவை 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Posted on August 24, 2025 by Admin | 249 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சமீபத்திய கைது குற்றச்சாட்டுகள் சிறியவையாக இருந்தாலும், அவர் 1977ஆம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“1977இல் அவரது அரசாங்கம் தேர்தல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டது. இதற்கு ரணிலும், ஜே.ஆர். ஜயவர்தனவும் பொறுப்பாளிகள். அப்போதே அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், 1981 ஆம் ஆண்டு யாழ் நூலக எரிப்பு, 1983 ஜூலை கலவரங்கள் போன்ற சம்பவங்களின் காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையின் ஓர் அங்கமாக இருந்ததையும், அதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“1987 முதல் 1990 வரை அவரது அரசாங்கத்தின் கீழ் 60,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பத்தளந்த சித்திரவதை முகாமுடன் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அவர்மீது உள்ளன. இவை குறித்து விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. ஆனால் அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை,” என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், 2015 ஆம் ஆண்டின் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ரணிலின் தொடர்பும் தெளிவாக இருந்தபோதிலும், கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

“40 ஆண்டுகளுக்கு முன்பே பாரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய ஒருவர், இப்போது தான் எமது அரசாங்கத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். தற்போதைய சூழலில் விசாரணை அதிகாரிகள் தங்கள் கடமைகளை தடையின்றி நிறைவேற்ற முடிகிறது,” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.