கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்ட பின்னர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“இங்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது ரணில் விக்ரமசிங்கவுக்காக மட்டும் அல்ல; ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் அனைவரும் இணைந்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவின் ஜனநாயக விரோத கொள்கைகளுக்கு எதிராக நான் போராடியவள். தொடர்ந்து போராடுவேன். மத்திய வங்கி கொள்ளைச் சம்பவத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று நான் முன்பும் வலியுறுத்தியுள்ளேன்.
அப்போது கைது செய்திருந்தால், இன்றைய கைதுக்கு எதிராக இவ்வளவு எதிர்ப்பு எழுந்திருக்காது. ஆனால் இப்போது அவரை கைது செய்திருப்பது மிகவும் சிறிய விடயத்துக்காக மட்டுமே.
முந்தைய ஜனாதிபதிகளும், இன்றைய ஜனாதிபதியும் அதிகாரப்பூர்வ பயணங்களின் போது தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ஜெர்மனிக்கு சென்ற தற்போதைய ஜனாதிபதியும் அதேபோல தனிப்பட்ட பயணங்களில் ஈடுபட்டார்” என்று அவர் குறிப்பிட்டார்.