புத்தளம் – பாலாவி, நாகவில்லுவ வைட் மண்டபத்தில் ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் நினைவாக, OHRD அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு ஷேக் முஹம்மது பதா அலி அப்துல்லா அல் காஜா அனுசரணை வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் காலித் நாசர் அல் அமரி பிரதம அதிதியாகவும்,பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரதம விருந்தினராகவும் கலந்துகொண்டனர். மேலும் பல பிரமுகர்கள், வர்த்தகத் தலைவர்கள், உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.
திருமணச் செலவுகளுடன் சேர்த்து ஒவ்வொரு தம்பதியினருக்கும் ரூ.3 இலட்சம் அன்பளிப்பு வழங்கப்பட்டது. அதோடு பரிசுகளும் கையளிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், நண்பர்கள், உலமாக்கள், திருமணப் பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது.
கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.எம். முபாரக் மதனி அவர்கள் மார்க்கச் சொற்பொழிவினை நிகழ்த்தியதோடு அல்ஹாபிழ் ரியாஸ் சிறப்பு பிரார்த்தனையையும் நடத்தினார். இந்நிகழ்வின் ஏற்பாட்டுச் செயலாளராக அகில இலங்கை Y.M.M.A முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி பணியாற்றினார்.