இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் HIV மற்றும் பிற பாலியல் தொடர்பான தொற்றுநோய்கள் (STI) தடுப்பு நடவடிக்கைகள் அதில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டு திட்டம் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் இத்தகவல்கள் தேசிய கல்வி நிறுவனம் (NIE) வழியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் நோக்கம், தற்போதைய பாடத்திட்டத்தில் காணப்படும் இடைவெளிகளை நிரப்பி, மாணவர்களுக்கு வயதுக்கு ஏற்ற முறையில் துல்லியமான அறிவை வழங்குவதாகும்.
தற்போதைய அறிவியல் மற்றும் சுகாதாரம்/உடற்கல்வி பாடப்புத்தகங்களில், “பொறுப்பான பாலியல் நடத்தை” மூலமே HIV ஐத் தடுப்பது சாத்தியம் என மட்டுமே குறிப்பிடப்படுகின்றது. “ஆணுறை, PrEP, PEP போன்ற உயிரிமருத்துவ தடுப்பு முறைகள் விவரிக்கப்படாததால், மாணவர்கள் முக்கியமான தடுப்பு உத்திகள் குறித்து போதுமான தகவல்களை பெறவில்லை,” என ஆலோசகர் வெனரியாலஜிஸ்ட் டாக்டர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “2024 உலகளாவிய பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பு, சீர்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையை சமாளிக்க, சுகாதார மேம்பாட்டு பணியகம், யுனெஸ்கோ வழிகாட்டுதலுடன் இணைந்து, “வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம்” என்ற தலைப்பில் விரிவான பாலியல் கல்வி (CSE) தொகுப்பை உருவாக்கி வருகிறது. உயிரியல்,உளவியல்,சமூக மாதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்த திட்டம், மாணவர்கள் அபாயகரமான நடத்தைச் சந்திக்கும் முன்பே தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், நாட்டின் பல பகுதிகளில் STD கிளினிக்குகள் நடத்திய 264 பள்ளி சுகாதாரத் திட்டங்கள் மூலம், 54,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றடைந்ததாக டாக்டர் தர்மகுலசிங்க குறிப்பிட்டார்.
மேலும், பாடத்திட்டச் சீர்திருத்தத்துடன் இணைந்து ஆசிரியர் பயிற்சிக்கும் முன்னுரிமை வழங்கப்படும். “ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஆலோசகர்கள், எச்.ஐ.வி தடுப்பு உத்திகள் குறித்த முன்-சேவை மற்றும் சேவைக்காலப் பயிற்சிகளைப் பெற்று, நம்பிக்கையுடனும் நிலைத்தன்மையுடனும் பாடங்களை நடத்த வேண்டும்,” என அவர் கூறினார்.
இருப்பினும், இத்தகவல்கள் தொடர்பாக கல்வி அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை