அம்பாறை மாவட்டத்தின் அழகிய சுற்றுலாத் தலமான அருகம்பே கடற்கரையில், “Made in Sri Lanka” வர்த்தகக் கண்காட்சி 2025 இன்று (29.08.2025) வெள்ளிக்கிழமை விமர்சையாக தொடங்கப்பட்டது.
இக்கண்காட்சியை, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் கௌரவ சுனில் ஹதுன்நெத்தி, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ, அத்துடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித், பிராந்திய அரசியல்வாதிகள், பிரதேச செயலாளர்கள், பல்நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்துவது இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். இதற்காக, கிராமிய மட்டத்தில் தயாரிக்கப்பட்ட உயர்தரப் பொருட்களைக் கொண்ட 60-க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட செயலகம், பொத்துவில் பிராந்திய செயலகம், Future Rismo (Pvt) Ltd, Hatton National Bank, Bridjin உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பில், இக்கண்காட்சி ஆகஸ்ட் 29, 30, 31 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும்.
விற்பனைக்குப் புறம்பாக, விளையாட்டு போட்டிகள், பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள், கலிப்சோ இசை நிகழ்ச்சிகள் மற்றும் இறுதிநாளில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி என பல்வேறு அம்சங்களும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், நேரடி உணவு தயாரிப்பு அரங்குகள் பார்வையாளர்களின் சுவை உணர்வை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தக் கண்காட்சி தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.