2025 ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி இன்று (13) தமது முதல் ஆட்டத்தில் பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது. அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற ஷேய்க் ஷயித் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது.
2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஷேய்க் ஷயித் மைதானம், 22 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டதாகவும், ஒரே நேரத்தில் சுமார் 20,000 பார்வையாளர்களை அமர்த்தும் திறனைக் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இப்போட்டித் தளத்தில் இதுவரை பங்களாதேஷ் 3 போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், இலங்கை அணி 6 போட்டிகளில் ஆடி, 3 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
போட்டி நடைபெறும் ஆடுகளம் பொதுவாக சீரான மற்றும் சமநிலைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஆட்டம் நீளும்போது ஆடுகளம் மெதுவாகி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் பெறும். இதனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலான சூழ்நிலை உருவாகும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதனால் இரு அணிகளுக்கும் பவர்பிளே ஓவர்கள் முக்கியமான பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.