அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை புள்ளிகள் அடிப்படையில் மதிப்பிட்டு தரவரிசை வழங்கும் திட்டத்தை, அரசியல் கட்சித் தன்மை பாராமல் “செயலில் திறமை – தரவரிசையில் முன்னிலை” என்ற தலைப்பில் thelivu.net செய்தித்தளம் 2025.08.15ம் திகதி அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்த தரவரிசை திட்டம் குறித்து (15.08.2025) பொதுமக்களுக்கும் கெளரவ உறுப்பினர்களுக்கும் எமது செய்தியினூடாக தகவல் வழங்கியதுடன், சபை உறுப்பினர்களின் பங்களிப்புகளைப் பொறுத்தே புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் எமது இணையதளம் நினைவூட்டியுள்ளது.
புள்ளிகள் வழங்கப்படும் முக்கிய நியதிகள்
1. சபை அமர்வுகளில் பங்கேற்பு
2. பொதுமக்கள் நலனுக்காக முன்வைக்கும் பிரேரணைகள்
3. சபையால் ஏற்றுக்கொள்ளப்படும் பிரேரணைகள்
4. விசேட கூட்டங்களில் பங்கேற்பு
முதலாவது அமர்வில் உறுப்பினர்களுக்கு பிரேரணைகளை சமர்ப்பிக்கும் வாய்ப்பு இல்லாத காரணத்தால் 17 பேருக்கும் ஒரே புள்ளிகள் வழங்கப்பட்டன. எனினும், விசேட கூட்டத்தில் பங்கேற்காத மூன்று உறுப்பினர்களின் புள்ளிகள் குறைக்கப்பட்டு 19.08.2025 அன்று thelivu.net முதலாவது தரவரிசையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடப்பட்டது.
-இரண்டாவது அமர்வில் எழுந்த சர்ச்சை-
நேற்று வெளியிடப்பட்ட (14.09.2025) இரண்டாவது அமர்வுக்கான(August )தரவரிசை தொடர்பில் கௌரவ உறுப்பினர் ஏ.சி. நியாஸ் அவர்கள் தனது முகப்புத்தகத்தில்“ஒருபட்சமான கருத்து கணிப்பு” என விமர்சித்துள்ளார்.
“ஒரு பொதுமகன் விமர்சித்திருந்தால் நாம் பதில் வழங்குவது அவசியமில்லை, ஆனால் நீங்கள் சபையின் கெளரவ உறுப்பினர் என்பதால் விளக்கமளிக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது”
கெளரவ உறுப்பினர் ஏ.சி.நியாஸ் அவர்களே!
எங்களது தரப்படுத்தலில் நீங்களும், ஏனைய உறுப்பினர்களும் முதன்மையானவர்களாக வரவேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம் ஆனால் எங்களது புள்ளியிடும் நியதிகளுக்குள் நீங்கள் புள்ளிகளைப் பெறாமை உங்களது தவறாகும்.
கெளரவ உறுப்பினர் ஏ.சி. நியாஸ் அவர்களிடம் சில கேள்விகளை நாம் வினவ விரும்புகிறோம்.
தரவரிசையில் முதல் ஏழு இடங்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பிரேரணைகளை சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள், 2வது அமர்வில் எந்தப் பிரேரணையுமே சமர்ப்பிக்காத நிலையில் தரவரிசையில் முதன்மையை எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. “ஒரு மாணவன் பரீட்சைக்கு முறையாக கற்காமல் குறைவான புள்ளிகளைப் பெற்றுவிட்டு பரீட்சைத் திணைக்களத்தினை குறை கூறுவது போன்று உள்ளது உங்களது இந்த விமர்சனம்”
பிரேரணையை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பதை பற்றி ஒரு உறுப்பினர் அறிந்திருப்பது கடமையாகும்.
ஒரு பிரேரணையை சபையில் அங்கீகரிக்கும்படி சமர்ப்பிக்க வேண்டும் என்றால்:
• ஒரு உறுப்பினர் சபை அமர்வு நடைபெறுவதற்கு முன்னர் உள்ள 07 வேலை நாட்களுக்கு முன்னர் தனது பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டும்.(இதனை பிரேரணை சமர்ப்பித்தல் எனப்படும்)
• நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு, கலந்துரையாடப்பட்டு, சபையால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை ஆகும்.
கெளரவ உறுப்பினர் கடந்த அமர்வில் இவ்வாறான நடைமுறையை பின்பற்றியிருந்தால் அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
முன்னமே,பிரேரணைகளை சமர்ப்பிக்காமல் அமர்வு நடைபெறும் போது நீங்கள் நினைப்பதையெல்லாம் ஒலிவாங்கியில் பேசுவதனையும் முகப்புத்தகத்தில் பதிவிடும் பதிவுகளையும் பிரேரணைகள் என ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை அறிந்திருப்பீர்கள் என நாம் நினைக்கிறோம்.
முகப்புத்தகத்தில் இடுகின்ற பதிவுகளையும் , Live நிகழ்ச்சிகளையும் வைத்து நாங்கள் உறுப்பினர்களை தரப்படுத்துகிறோம் என நீங்கள் நினைத்தால் அவ் எண்ணத்தை உடனடியாக மாற்றிவிடுங்கள்.
கெளரவ உறுப்பினர் அவர்களே!
உறுப்பினர்களை நாம் தரப்படுத்துவதன் நோக்கம் ஒரே ஒன்றுதான்…
உங்களது வட்டாரத்தில் உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு அவசியமானதும் முக்கியமானதுமான தேவைகளை உறுப்பினர் அடையாளம் கண்டு அதனை பிரேரணையாக சமர்ப்பித்து மக்களுக்கான அபிவிருத்திகள் நடைபெறவேண்டும் என்பது மட்டும்தான். யாரையும் தாழ்த்துவதோ, உயர்த்துவதோ எங்களது வேலையில்லை. உண்மையை மட்டும் ஆதாரத்துடன் எழுதுவோம்.
கடந்த காலங்களில் உங்களது சேவைகளையும் எமது தளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளோம் என்பதனையும் இவ்விடத்தில் ஞாபகமூட்டுகிறோம்.
எமது தரப்படுத்தலில் எந்தக் கட்சியினதும் எந்த உறுப்பினரும் முன்னிலை பெறலாம் பெறாமலும் விடலாம். எந்தவொரு உறுப்பினருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. ஓநாய்களின் சலசலப்புகளுக்கு நாம் ஒரு போதும் அஞ்சப்போவது கிடையாது என்பதனை விளங்கிக்கொள்ளுங்கள்.
கெளரவ உறுப்பினர் அவர்களே! உங்களது முகநூல் பதிவுகளை சற்று நிதானமாக யோசித்து பதிவிடுங்கள். உங்களை மக்கள் கெளரவமாக பார்க்கிறார்கள். நாமும் உங்களை கெளரவமாக இதுவரை பார்க்கிறோம்.
எமது தரப்படுத்தல் அனைத்தும் வலுவான ஆதாரங்களுடனே முன்னெடுக்கப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் தொட்டதை உங்களது கெளரவம் பேணி உங்களது தெளிவிற்கு இவ்வளவும் போதும் என நினைக்கிறோம்.
நாம் தந்த தெளிவான தகவல்களில் உங்களுக்கு தெளிவு போதாது என்றால் மீண்டும் இதுதொடர்பாக பதிவொன்றினை பதிவேற்றுங்கள்
நாமும் அதற்கான பதிலை “உங்களுடைய கெளரவத்தை” சற்று விலக்கிவிட்டு வலுவான ஆதாரங்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் அறியும்படி முன்வைக்க தயாராவுள்ளோம் என்பதனை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.
எமது தரப்படுத்தல் தொடர்பாக எந்த ஒரு உறுப்பினரும் விமர்சனம் செய்யலாம் ஆனால் அதன்பின் எங்களது பதில்கள் வலுவானதாகவும் பகிரங்கமாகவும் அமையும் என்பதனையும் தெரிவிக்கிறோம்.
ஒருபோதும் நாம் எந்தவொரு உறுப்பினருக்கும் அநீதி இழைக்கமாட்டோம் என்பதனையும் எமது தரப்படுத்தல் மேற்குறிப்பிட்ட நியதிகளின் அடிப்படையில் இடம்பெறும் என்பதனையும் பொறுப்புடன் அறியத்தருகிறோம்.
ஒரு சில ரூபாய்களுக்கும் உணவுக்காகவும் அலைந்து திரியும் ஊடகம் என எம்மை தவறாக நினைத்து விடாதீர்கள் …
உங்களைப்பற்றிய வலுவான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன…
“எழுத்தின் சத்தம் பீரங்கியினை விட வலிமையானது”
இந்த தரப்படுத்தல் திட்டம் பிரதேச சபையில் உறுப்பினர்களின் செயல்திறனை அதிகரிக்கும் ஒரு ஆரோக்கியமான முயற்சியாகும். அதனை உறுப்பினர்கள் உணர்ந்து, விமர்சனத்தை விடச் செயல்பாட்டை முன்னிலைப்படுத்தும் போது மட்டுமே உறுப்பினர்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.