இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ (Coldrip) என்ற இருமல் மருந்தை உட்கொண்டதால் 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் இதே மருந்தை பயன்படுத்திய சில குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில், கோல்ட்ரிப் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் (Diethylene Glycol) எனப்படும் மிக ஆபத்தான ரசாயனக் கலப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மருந்தை தயாரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்ட மற்ற இரண்டு இருமல் மருந்துகளும் பரிசோதனையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என தெரியவந்துள்ளதால் அவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) விசாரணை தொடங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் D.R., ரீலைப் ஆகிய மூன்று மருந்துகளும் மனித உடல்நலத்துக்கு கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என WHO எச்சரித்துள்ளது.
அத்துடன், இந்த மருந்துகள் ஏதாவது ஒரு நாட்டில் விற்பனைக்கோ பயன்பாட்டுக்கோ உள்ளதாகக் கண்டறியப்பட்டால் உடனடியாக முறைப்பாடு அளிக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கூறப்பட்ட எந்த மருந்துகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் இந்திய அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.