இஸ்ரேல் வேலைவாய்ப்பு தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரர் இன்று (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழியர்களை அனுப்புவதில் முறைகேடு இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கச் சென்றபோதே மனுஷ நாணயக்காரர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா நான்கு மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீரப் பிணைகள் வழங்க உத்தரவிட்டது. மேலும், அவரது வெளிநாட்டு பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. அத்துடன், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையும் நீதிமன்றம் விதித்தது.
பிணை உத்தரவை வழங்கும் போது, நீதவான் குறிப்பிட்டதாவது , மனுஷ நாணயக்காரர் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனு நேற்று (14) நிராகரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் தாமாக முன்வந்து இன்று ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்ததை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.
அவரால் நீதிமன்றத்தை தவிர்த்துச் செல்லும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதால், முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி தரப்புகளின் வாதங்களை பரிசீலனை செய்து பிணை வழங்கப்பட்டதாக நீதவான் தெரிவித்தார். இவ்வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை டிசம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.