Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

ஒரே நாளில் ஆறு பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு

Posted on October 22, 2025 by Admin | 259 Views

2025.10.20ம் திகதி மட்டும் ஆறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இவ்வாறு பதிவான ஆறு சம்பவங்களில் ஐந்து காதல் தொடர்புகளின் விளைவாக நடந்ததாகவும், ஒன்று பலவந்தத் துஷ்பிரயோகமாக இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

பலவந்தமாக நடந்த குற்றச்செயலில் சந்தேகநபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் சட்டபூர்வமற்ற கணவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமிகள் 12, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு பின்னரே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆறு சம்பவங்களும் ஆனமடுவ, தெபுவன, கம்பளை, பயாகல மற்றும் தமன பொலிஸ் நிலைய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீப காலங்களில் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலிருந்தும் இத்தகைய பல வழக்குகள் தினமும் பதிவு செய்யப்பட்டு வருவதால், தங்களின் மகள்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இளம் வயதில் உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படும் கவனக்குறைவான முடிவுகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை நினைத்து சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.