Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

நுவரெலியாவை மூடிய கடும் குளிரும் பனிமூட்டமும் – பொலிஸார் எச்சரிக்கை

Posted on October 24, 2025 by Admin | 360 Views

கடந்த சில நாட்களாக நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (24) காலை முதல் நுவரெலியாவில் பல பகுதிகள் கடுமையான பனிமூட்டத்தால் மூடப்பட்டுள்ளன.

இதனால் மலையகப் பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று போக்குவரத்து பொலிஸார் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கியமாக நுவரெலியா–ஹட்டன், நுவரெலியா–கண்டி மற்றும் நுவரெலியா–பதுளை பிரதான வீதிகள் உட்பட, சீத்தாஎலிய, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் தோட்டம், உலக முடிவு பிரதான வீதி, கந்தபளை, நானுஓயா, நானுஓயா புகையிரத நிலையம், ரதல்ல குறுக்கு வீதி, டெஸ்போட், கிரிமிட்டி போன்ற பகுதிகளிலும் பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது.

பனிமூட்டம் அதிகம் காணப்பட்டதால் இன்று காலை முக்கிய வீதிகளில் பயணித்த வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.

வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவிற்கு வரும் புதிய வாகன ஓட்டிகள் தங்களது முன்விளக்குகளை ஒளிரச்செய்து மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்குமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியாவில் கடும் குளிர் நிலவுவதோடு இடையிடையே மழையும் பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து சிரமங்களும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.