வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கி தாரி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளில், குறித்த நபர் பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (22) வெலிகம பிரதேச சபையின் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் லசந்த விக்ரமசேகர உயிரிழந்தார்.
தற்போது அவரது உடல் மிதிகமையில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய தெற்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் அவர்களின் மேற்பார்வையில், மாத்தறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமார தலைமையில் நடைபெற்று வருகின்றன.
இதற்காக நான்கு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு குழுக்கள் சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள சி.சி.டி.வி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இன்று (24) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தொலைபேசி அழைப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.