(அக்கரைப்பற்று செய்தியாளர்)
நேற்று ஞாயிற்றுக்கிழமை(26) இரவு 10.30 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டிருந்த அக்கரைப்பற்று பஸ் டிப்போவிற்கு சொந்தமான பஸ் (ND–9506) கல்முனை பகுதியில் திடீரென ஒளியிழந்து பழுதடைந்து நின்றது.இதனால் சுமார் 55 பயணிகள் நள்ளிரவிலும் இருளிலும் கடும் அவதிக்குள்ளாகினர்.
பஸ் புறப்பட்டு அரை மணி நேரம் கூட ஆகாத நிலையில் திடீரென பஸ்ஸின் ஒளிவிளக்குகள் அணைந்தன. சாரதி உடனே பஸ்ஸினை கல்முனை பஸ் டிப்போவினடியில் கொண்டு சென்றாலும் அங்கு மின்சாதன நிபுணர் (electrician) இல்லை என தெரிவிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் நடுவீதியில் சிக்கிக்கொண்டனர். சிறு குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், விமான நிலையம் செல்லும் பயணிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் பயணித்த பஸ்ஸின் நிலை மாறியது.
“இத்தனை பேரின் உயிர் பஸ்ஸில் இருக்கும்போது, பராமரிப்பை அலட்சியம் செய்வது மிகப் பொறுப்பில்லாத செயல்!” என பல பயணிகள் அதிருப்தியுடன் கூறியதுடன் கல்முனை டிப்போவில் இருந்து எதுவித உடனடி உதவியும் வழங்கப்படாமையினால் பலர் இரவு நேரத்தில் துன்பத்துடன் காத்திருந்தனர்.
பஸ்கள் பழுதடைவது இயல்பானதே ஆனால் அதனை உடனடியாக சரிசெய்யும் ஏற்பாடுகள் டிப்போக்களில் இருக்க வேண்டியது அவசியம்.
“இறைவன் கொடுக்க நினைத்தால், கூரையைப் பிய்த்துக் கொண்டாவது கொடுப்பான்” எனும் கூற்றினைப் போல் அந்த பஸ்ஸில் பயணித்த ஒரு பயணி தன்னுடைய திறமையால் பஸ்ஸின் மின்விளக்குகளை மீண்டும் ஒளிரவைத்தார்.அதன் மூலம் பஸ் மீண்டும் கொழும்பு நோக்கி பயணத்தைத் தொடர்ந்தது.
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் அக்கரைப்பற்று பஸ் டிப்போவிற்கு சொந்தமான பஸ் அடிக்கடி இவ்வாறு இடை நடுவே பழுதடைவது இயல்பானது என அந்த பஸ்ஸில் அடிக்கடி பயணம் செய்யும் நெடுந்தூர பிரயாணிகள் கூறினர்.
இச் சம்பவம் குறித்து அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பஸ் டிப்போக்களின் செயல்பாடுகளை உடனடியாக விசாரித்து எதிர்காலத்தில் இத்தகைய அவலங்கள் மீண்டும் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


