பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவலைத் தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மட்டத்தில் நடைபெறும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக இலங்கை பொலிசின் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, தேவையெனில் பாடசாலை அதிபர்கள் நேரடியாக இலங்கை பொலிசின் மோப்ப நாய்ப் பிரிவின் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு தேவையான உதவியைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு, “நாடே ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டம் அரசின் அனைத்து நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதில் இலங்கை பொலிசும் நேரடியாக பங்கேற்று வருகிறது. குறிப்பாக, பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடிகளை தடுக்க, பாடசாலைகளை மையமாகக் கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர் குழுவின் ஒத்துழைப்புடன் பல்வேறு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளும் தற்போது பல பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.