பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் மீரிகம கீனதெனிய பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஸ்டெபனமுனி தேவாலயத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது கல்வி அமைச்சு 6ஆம் வகுப்பு முதல் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள பாலியல் கல்வி பாடத்திட்டம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“இந்த புதிய பாடத்திட்டம் நம் நாட்டின் பண்பாட்டு மற்றும் மத மரபுகளுக்கு பொருத்தமற்றது. இது சர்வதேச அமைப்புகளின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. இத்தகைய திட்டங்களை உடனடியாக நிறுத்த ஆட்சியாளர்கள் தலையீடு செய்ய வேண்டும்” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “நம் நாடு பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரை ஒருமித்த முயற்சியால் முடிவுக்கு கொண்டு வந்தது போல, இப்போதும் இந்த பொருத்தமற்ற கல்வித் திட்டத்தைக் கைவிட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுகுறித்து ஜனாதிபதி சரியான முடிவை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.