இலங்கைச் சுற்றுவட்டாரத்தில் நிலைத்து நிற்கும் தாழமுக்க காரணமாக இன்று நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற பிரதேசங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட கனமழை பெய்யக்கூடும் எனவும் மற்ற பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை பதிவாகலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் உருவாகும் அபாயங்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.