(அபூ உமர்)
புதிய கல்வி மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட கல்விக் குழுவில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் 2025.11.20ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் அம்பாறை மாவட்ட எம்பி எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கல்வி மறுசீரமைப்பு குழு வர்த்தமானியில் வெளியீடு செய்யப்பட்டபோது அதில் முஸ்லிம் சமூக பிரதிநிதி ஒருவர் இடம்பெறாததை உதுமாலெப்பை எம்பி முன்னமே சுட்டிக்காட்டிருந்தார். மேலும், கடந்த கல்வி அமைச்சுச் சாரா ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும்கூட அவர் முஸ்லிம் பிரதிநிதியை குழுவில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டார். அப்போது முஸ்லிம் பிரதிநிதி நியமிக்கப்படும் என உறுதியும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் முஸ்லிம் பிரதிநிதியினது நியமனம் தாமதமான நிலையில் மீண்டும் அவர் இதுகுறித்து வாய்மூல கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர்,
“கல்விக் குழுவில் முஸ்லிம் பிரதிநிதி உள்வாங்கப்பட்டுள்ளார்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம் பிரதிநிதி நியமனம் உறுதி செய்யப்பட்டதற்காக எம்.பி. உதுமாலெப்பை பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.