நாட்டில் மோசமான வானிலை காரணமாக உருவான திடீர் அனர்த்த நிலையை கருதி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி இன்று (28) முற்பகல் முப்படைத்தளபதி தலைமையகத்தில் அவசரச் சந்திப்பை நடத்தினார்.
சந்திப்பில் பேசிய ஜனாதிபதி, “இந்த சவாலான கட்டத்தை கடக்க, மக்கள் உயிர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை காலத்துக்கு ஏற்றவாறு வழங்கவும் எல்லா தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அனர்த்த நிலைமையை திறம்பட கையாள அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்ததுடன், அதற்கான முழு ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
நிவாரண நடவடிக்கைகளுக்கான நிதியில் எந்தத் தடையும் இல்லையென ஜனாதிபதி விளக்கினார். மாவட்டச் செயலாளர்களுக்கு தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பயன்படுத்துவதற்கு எந்தச் சுற்றறிக்கையும் தடையாக இருக்காது என்றும் கூறினார். தடைகள் ஏற்பட்டால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணக்கத்துடன் நிதியை பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தினார்.
மழை மற்றும் வெள்ளத்தால் அணுக முடியாத பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மேலும் தேவைப்பட்டால் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஹெலிகொப்டர் வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாதுகாப்பு முகாம்கள், வீடுகளில் தங்கியுள்ளவர்கள் மற்றும் வெளியே உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமைத்த உணவு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரணச் சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதாகவும், நிவாரண சேவைகள் எட்டாத பகுதிகள் இருந்தால் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு தகவல் அளிக்க மக்கள் பிரதிநிதிகளை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் அபாயகரமான நிலையை சமாளிக்க தேவையான திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகள் தமது மாவட்டங்களின் நிலைமை மற்றும் உடனடி தேவைகள் குறித்து ஜனாதிபதிக்கு விரிவாக விளக்கினர்.
இந்த அவசரக் கலந்துரையாடலில் பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சு செயலாளர்கள், உயர் அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறைச் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


