மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து வழக்கை சட்ட நடவடிக்கையின்றி முடித்துத் தருவதற்காக 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி எத்தால பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்த காரணத்தால் பொலிஸார் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சட்ட நடவடிக்கை எடுக்காமல் அனுமதிப் பத்திரத்தை மீள வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் 3,200 ரூபாய் இலஞ்சம் கோரியதாக பாதிக்கப்பட்ட நபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் 2,200 ரூபாய் இலஞ்சமாகக் கோரிய சந்தேக நபர் பின்னர் நேற்று (17) மேலும் 1,000 ரூபாய் கோரியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பதில் பொறுப்பதிகாரியாக பணியாற்றும் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று மாலை 4.10 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற வேளையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விரைவில் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.