Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பிரதேச செயலகங்களுக்கு வந்த வெடி குண்டு மிரட்டல்

Posted on December 29, 2025 by Admin | 164 Views

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் குண்டு இருப்பதாக தெரிவிக்கும் மின்னஞ்சல் ஒன்று இன்று (29) அந்த அலுவலகத்திற்கு கிடைத்ததைத் தொடர்ந்து வளாகம் முழுவதும் அவசர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர அவர்களுக்கு அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் “களஞ்சிய அறைக்குள் குண்டு ஒன்று உள்ளது. அது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெடிக்கும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதேச செயலாளர் அலுவலக ஊழியர்களையும் அங்கு இருந்த பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியதுடன் சம்பவம் குறித்து பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்தார்.

நாவலப்பிட்டி பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட விரிவான சோதனைகளில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் கண்டறியப்படவில்லை.

இச் சம்பவம் தொடர்பாக அந்த இடத்திற்கு சென்ற கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க நிலைமைகளை நேரில் பார்வையிட்டு விசாரித்தார்.

இதனிடையே பூஜப்பிட்டிய பிரதேச செயலகத்திற்கு இன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகக் கூறி வந்த மற்றொரு மின்னஞ்சல் போலியானது என விசாரணைகளில் உறுதியாகியுள்ளது என்று பூஜப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அலுவலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

நேற்று (28) விடுமுறை தினமாக இருந்ததால் இன்று காலை அலுவலகம் திறக்கப்பட்ட பின்னரே குறித்த மின்னஞ்சல்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளன. அதிகாரிகளை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு எச்சரித்திருந்த அந்த தகவல்களைத் தொடர்ந்து பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டு சுமார் நான்கு மணிநேரம் தீவிர சோதனை நடத்தப்பட்ட போதிலும் எந்தவித சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.