Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் மக்கள்

Posted on January 26, 2026 by Admin | 376 Views

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட மற்றும் இதமான காலநிலையும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையும் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

தற்போது நுவரெலியாவின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் உறைபனிப்பொழிவு காணப்படுவதுடன் பகல் வேளைகளில் வெப்பமான காலநிலையும் மாலை நேரங்களில் பனிமூட்டமும் நிலவி வருகிறது. இந்த மாற்றமிக்க காலநிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

இத்தகைய குளுகுளு காலநிலையை அனுபவிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றனர்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை முதல் நுவரெலியாவை நோக்கி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் காரணமாக சுற்றுலா பகுதிகளில் பெரும் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது.

விக்டோரியா தாவரவியல் பூங்கா, பழமையான பிரதான தபால் அலுவலகம் அமைந்துள்ள பகுதி, நுவரெலியா–பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள கிரகரி வாவி உள்ளிட்ட இடங்களில் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டிருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.