Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இன்று இரவு 11 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்

Posted on February 7, 2026 by Admin | 604 Views

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் இன்று (07) நண்பகல் 12.00 மணியளவில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பாக ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதுடன் இவ் எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைப்பதற்காக பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மின்னல் தாக்கம் ஏற்படும் வேளைகளில், பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடிய அறைகளுக்குள் தங்க வேண்டும். மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்த வெளிகளில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடி முழக்கம் ஏற்படும் சமயங்களில், கம்பித் தொடர்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சார இணைப்புடன் உள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் துவிச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலைகளில் தங்களது பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.