Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

குறைந்த அழுத்தம் விலகுவதனால் பலத்த மழை படிப்படியாக குறைவு

Posted on February 22, 2026 by Admin | 342 Views

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவி வந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் சென்று வருவதால் அண்மையில் நிலவிய பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (22) பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் நாளை (23) வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமும் காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.