புனித ரமழான் மாதத்தின் மாண்பை போற்றும் வகையில் அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வின் 15வது வருட நிகழ்வு ஹதீஸ் மஜ்லீஸ் குழுவின் தலைவர் ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.சப்ரி தலைமையில் அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இடம்பெற்று வருகிறது.
இவ்ஹதீஸ் மஜ்லீஸின் நேற்றைய இரண்டாவது நிகழ்வில்(2026.02.22) அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி(பின்னூரி) அவர்கள் விசேட சொற்பொழிவை நிகழ்த்தி ஆன்மீக உணர்வு, பெண் கல்வியின் அவசியம், பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள், மத நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணங்களை வளர்ப்பதன் அவசியத்தினை வலியுறுத்தினார்.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எம் நாட்டில் இடம்பெற்ற கொடூரமான சம்பவமானது முழு முஸ்லிம் சமூகத்தையும் தலைகுனியவைத்துள்ளது. இது போன்று ஒரு சம்பவம் வரலாற்றில் இடம்பெறவே கூடாது. இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை அனுமதிக்கவுமில்லை ஆதரிக்கவுமில்லை. எம் நாட்டை பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் பாதுகாப்பு பிரிவினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் மத நல்லிணக்கத்தை பேணுவதனையும் நல்லெண்ணங்களையும் பரஸ்பர மரியாதையையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அல் இபாதா கலாசார மன்றத்தின் போசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் வழகாட்டலில் கடந்த 15 வருடங்களாக இம் மன்றம் சிறப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் ஐ.எல்.எம். ஹாஸிம்(ஸூரி), அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.எம்.கலாமுல்லாஹ்(ரஷாதி), அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மெளலவி என்.ரி.நசீர், உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,இளைஞர்கள்,அல் இபாதா கலாசார மன்ற நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

