Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அலிரேசா அராஃபி நியமனம்

Posted on March 1, 2026 by Admin | 373 Views

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து நாட்டின் இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய அரசியலமைப்பின் 111வது பிரிவின்படி, உச்சத் தலைவர் பதவியில் இல்லாத சூழலில் அல்லது அவர் மரணமடைந்தால் புதிய தலைவரை நிபுணர்கள் பேரவைத் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்காலத் தலைமை அமைப்பு அமுல்படுத்தப்பட வேண்டும். அந்த விதிமுறைகளுக்கு இணங்க உயர்மட்ட மதகுருமார்கள் மற்றும் அரசியல் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு அலிரேசா அராஃபி இப்பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அலிரேசா அராஃபி ஈரானின் செல்வாக்குமிக்க மத மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தற்போது அவர் பாதுகாவலர் சபையின் உறுப்பினராகவும், ஈரானிய மதக் கல்விக்கூடங்களின் தலைவராகவும், நிபுணர்கள் பேரவையின் மூத்த உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த அனுபவங்கள் அவரை இடைக்காலத் தலைமைப் பொறுப்பிற்கான முக்கியமான தேர்வாக மாற்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போரினால் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் தருணத்தில் அலி காமேனியின் மறைவு ஈரானின் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாட்டின் நிர்வாகம் மற்றும் இராணுவ கட்டமைப்பு தடையின்றி செயல்பட வேண்டும் என்பதற்காக அலிரேசா அராஃபியின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நிபுணர்கள் பேரவை விரைவில் கூடவுள்ளதாகவும், நிரந்தர உச்சத் தலைவரைத் தேர்வு செய்யும் வரை அலிரேசா அராஃபி உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரத்துடன் செயல்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான முக்கிய தீர்மானங்களில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் உள்ளிட்ட தற்காலிக சபையுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.