Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 17, 2026

இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை

Posted on March 15, 2026 by Admin | 144 Views

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தாக்கம்: இலங்கையில் மீண்டும் கட்டாயமாகும் QR எரிபொருள் அனுமதி முறை

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான போர்ச் சூழலினால் நாட்டிற்குள் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதையும் கருத்தில் கொண்டு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR Code முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று (15) காலை 6.00 மணி முதல் நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறை கட்டாயமாக அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர்நிலை காரணமாக சர்வதேச எரிபொருள் விநியோக மார்க்கங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதன் விளைவாக இலங்கையிலும் எரிபொருள் விநியோகத்தில் சவால்கள் உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாட்டில் எரிபொருளுக்கான தேவையும் எதிர்பாராத அளவில் அதிகரித்துள்ளதால் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் பொறுப்புடன் மற்றும் கட்டுப்பாடுடன் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைக்கும் செயல்களில் ஈடுபடுவதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் இதுவே சந்தையில் ஏற்பட்டுள்ள அசாதாரண தேவைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான மோசடி நடவடிக்கைகளைத் தடுத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்காகவே QR குறியீட்டு முறை மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்கப்படமாட்டாது.

வாகனத்தின் உரிமையாளர் மற்றும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கம் மாற்றமின்றி இருந்தால் 2026 மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தின் மூலம் தங்களுக்கான QR குறியீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வாகன உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாற்றமடைந்திருந்தால்்இன்று (15) காலை 6.00 மணி முதல் அதே இணையதளத்தின் ஊடாக மீண்டும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

முன்னதாக QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களும் இன்று காலை 6.00 மணி முதல் அதே இணையதளத்தில் பதிவு செய்ய முடியும்.

வாகனங்களுக்கு வழங்கப்படும் வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்) பின்வருமாறு:

  • பேருந்துகள் – 60
  • மோட்டார் சைக்கிள்கள் – 5
  • வேன்கள் – 40
  • கார்கள் / மோட்டார் வாகனங்கள் – 15
  • லொறிகள் – 200
  • காணி வாகனங்கள் – 25
  • முச்சக்கர வண்டிகள் – 15
  • விசேட தேவைக்கான வாகனங்கள் – 40
  • குவாட்ரிசைக்கிள்கள் – 5

நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்காக தேவையான வாகனங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.