(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
புனித ரமழான் மாதத்தின் ஆன்மீகச் சிறப்பை வலுப்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் வருடாந்தம் நடத்தி வரும் ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வின் 15வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் 2026.03.15ம் திகதி அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் ஹதீஸ் மஜ்லீஸ் குழுவின் தலைவர் எம்.ஐ.சப்ரி தலைமையில் நடைபெற்றது.
அல் இபாதா கலாசார மன்றத்தின் போசகரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.அப்துல் வாஸித், கோடீஸ்வரன், முன்னாள் பிரதி அமைச்சர் பைசால் காசீம், சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அநுபம மங்கல விக்ரமாஆராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புனித ரமழான் மாதத்தின் ஆன்மீகப் பண்புகளையும் சமூக ஒற்றுமையையும் எடுத்துரைக்கும் மகத்தான இந்நிகழ்வின் நோன்பு திறக்கும் தருணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அல்லாஹ்வை நினைவு கூறிய சூழல் பக்தி மற்றும் சகோதரத்துவ உணர்வுகளைப் பிரதிபலித்தது.
புனித ரமழான் மாதத்தின் முதல் இருபது நாட்களாக இடம்பெற்ற மார்க்க சொற்பொழிவுகளை மையப்படுத்தி மாணவர்கள் மற்றும் பெரியோர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் , ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வில் பங்கேற்ற உலமாக்களுக்குமான கெளரவிப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், தவிசாளர்கள், கல்வியியலாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள் , பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.



