Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

அம்பாறை மாவட்ட நெல் களஞ்சியசாலைகளில் பல வருடங்களாக தேங்கியுள்ள நெல்லை அகற்றுமாறு உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

Posted on May 20, 2026 by Admin | 104 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அம்பாறை மாவட்டத்தின் களஞ்சியசாலைகளில் நீண்டகாலமாக குவிந்து கிடக்கும் சுமார் 50,000 மெட்ரிக் டொன் நெல்லை உடனடியாக அகற்ற அல்லது மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் உள்நாட்டரசிறை (திருத்தச்) சட்டமூல விவாதம் நேற்று (19) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்றபோது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அம்பாறை மாவட்டம் தேசிய அளவில் 22 சதவீதத்திற்கும் அதிகமான நெல் உற்பத்தியை வழங்கும் முக்கிய மாவட்டமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட தொடர் வெள்ளப் பாதிப்புகளால் மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 50,000 மெட்ரிக் டொன் நெல் தற்போது மாவட்டத்திலுள்ள பல களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் இப்போக நெல் அறுவடை ஆரம்பமாகவுள்ள நிலையில் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே பெரியளவு நெல் கையிருப்பாக உள்ளதால் புதிய அறுவடையை சேமிப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.

சம்மாந்துறை, மல்வத்தை, நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, தம்பட்டை, சாகாமம், பொத்துவில், பாணம, லவ்கல உள்ளிட்ட பல பகுதிகளின் களஞ்சியசாலைகளில் ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தெஹியத்தகண்டி, பதியத்தலாவ மற்றும் தமண பகுதிகளிலும் பெருமளவு நெல் கையிருப்பாக இருப்பதாக கூறினார்.

இதனால் நீண்டகாலமாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் அரிசி உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் விவசாய அமைச்சும் நிதி அமைச்சும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க இந்த விடயம் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார். தேசிய ரீதியில் பெருமளவு நெல் கையிருப்பாக உள்ளதுடன் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அறுவடை காலம் நெருங்கி வருவதால் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை படிப்படியாக அகற்ற அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை அகற்றுவதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன் அவை விரைவில் மாற்றப்படும் எனவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.