Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

சுகாதார ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் மோட்டார் சைக்கிள்களும்

Posted on May 27, 2026 by Admin | 202 Views

எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் களப்பணி நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் என்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களுக்கான உரிய சம்பள உயர்வு பெற்றுத்தரப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நிர்வாகக் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 275 அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் தேசிய விழா நேற்று (26) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளிப் பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

விழாவில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,
“நாட்டின் பொருளாதாரம் தற்போது படிப்படியாக ஸ்திரமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் நிலவிய போதிலும், மக்களுக்கு மேலதிக சுமைகளை ஏற்படுத்தாத வகையில் அரசாங்கம் பொருளாதாரத்தை மிகக் கவனமாகக் கையாண்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இம்முறை உலக சுகாதார மாநாட்டில் இலங்கையின் இலவச சுகாதார சேவைக்கு விசேட சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதை அமைச்சர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். இந்த உலகளாவிய பெருமைக்கு, அடிமட்ட அளவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பங்களிப்பே முதன்மைக் காரணம் என்றும் அவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் (NIHS) ஒருங்கிணைப்பில் நாடு முழுவதுமுள்ள 11 பயிற்சி மையங்களில் இந்தப் பயிற்சி நெறி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. தாய் மற்றும் சேய் சுகாதார மேம்பாடு, பொதுமக்களுக்கான சுகாதாரக் கல்வியை கொண்டு சேர்த்தல் மற்றும் குடும்ப சுகாதார ஊழியர்களின் களப் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்தல் ஆகிய முக்கிய பொறுப்புகள் சான்றிதழ் பெற்ற இந்த புதிய நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.