Top News
| வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி ஆரம்பம் | | அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தெளிவூட்டல் | | 10 வயதுச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடூழியச் சிறை |
Jun 8, 2026

கிழக்கு மாகாண பாடசாலைகளின் மின் கட்டணக் கொடுப்பனவை 25,000 ரூபாவாக உயர்த்த ஆளுநரிடம் உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

Posted on June 2, 2026 by Admin | 80 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

கிழக்கு மாகாண பாடசாலைகளின் நீண்ட காலமாக நிலவிவரும் உட்கட்டமைப்பு நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களுக்கும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பைக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று (01) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்கொள்ளும் பாரிய நிதி நெருக்கடியை தீர்ப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

தற்போது மத்திய கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பாடசாலைகளுக்கு மாதாந்த மின்சாரக் கட்டணமாக 25,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது ஆனால் மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் 1AB தரப் பாடசாலைகளுக்கு மாதாந்தம் வெறும் 2,500 ரூபா நிதி மின்சாரக் கட்டணமாக வழங்கப்படுகிறது. தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு மத்தியில் இந்த சொற்பத் தொகை போதுமானதாக இல்லை என்றும் இதனால் பாடசாலை நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் மாதாந்தம் பெரும் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெளிவுபடுத்தியதுடன் மாகாணப் பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்திறகாக வழங்கப்படும் நிதியை 25,000 ரூபாவாக உயர்த்தி வழங்க ஆளுநர் ஆவன செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்த ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர , கிழக்கு மாகாண 1AB பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படும் மாதாந்த மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது காலத்தின் தேவை என்பதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அது தொடர்பான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையிடம் உறுதியளித்தார்.