Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் முஹம்மது இஸ்ஃபாக் ஜனாதிபதி விருதுக்கு தெரிவு

Posted on June 25, 2026 by Admin | 535 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஹபீஸ்)

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்(2025) பரீட்சையில் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 9ஆம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் மாணவன் ஏ.ஆர்.முஹம்மது இஸ்ஃபாக் தேசிய ரீதியில் வழங்கப்படும் உயரிய கௌரவமான ‘ஜனாதிபதி விருதுக்காகத்’ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு மாணவனின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும் குறிப்பாக அட்டாளைச்சேனை மண்ணுக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் ஆரம்பித்து தரம் 11 வரை அங்கு பயின்ற இஸ்ஃபாக் அப்பாடசாலையின் சிரேஷ்ட மாணவத் தலைவராகவும் கடமையாற்றி தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக் கொண்டதுடன் அவரது கல்வித்துறையின் வளர்ச்சிக்கு இப்பாடசாலை பாரிய பங்கினை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் உயர்தரக் கல்வியை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் தொடர்ந்து இன்று இந்த இமாலய சாதனையை அவர் எட்டியுள்ளார்.

இம்மாணவனின் இந்த அரிய சாதனை குறித்து அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், இஸ்ஃபாகின் இந்த உன்னத வெற்றி அவரது தனிப்பட்ட உழைப்பிற்கு கிடைத்த அத்தாட்சி மட்டுமல்லாது எமது பாடசாலைக்கும் ஊருக்கும் சமூகத்திற்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும் எனக் குறிப்பிட்டார். இந்த வெற்றிப் பயணத்திற்கு பின்னணியில் இருந்து வழிநடத்திய பெற்றோர், அர்ப்பணிப்புடன் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் சக நண்பர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்து திட்டமிட்ட கல்வி உத்திகளினாலும் தளராத தன்னம்பிக்கையினாலும் தேசிய ரீதியிலான இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள மாணவன் முஹம்மது இஸ்ஃபாக் எதிர்காலத்தில் கல்வி, சமூக மற்றும் தொழில்சார் துறைகளில் மென்மேலும் பல சாதனைகளைப் புரிந்து தேசத்திற்குப் பயனுள்ள சிறந்த பிரஜையாக மிளிர வேண்டும் என பிராந்தியத்தின் கல்வி அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.