(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
நிந்தவூர் அல்லிமுல்லை முதல் மல்கம்பட்டி வரையிலான 6 கிலோமீட்டர் பிரதான வீதிக்கான மின்சார இணைப்பை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு மின்வலு மற்றும் ஒழுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்ற மின்வலு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போதே இப்பணிப்புரை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சுசார் குழுவின் உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, நிந்தவூர் அல்லிமுல்லையிலிருந்து மல்கம்பட்டி கிராமம் வரையிலான 6 கிலோமீட்டர் வீதிக்கு இதுவரை மின்சார இணைப்பு வழங்கப்படாததால் நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் விவசாயிகளும் நாளாந்தம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டினார்.
இந்த மின் இணைப்புத் திட்டம் தொடர்பாகக் கிழக்கு மாகாண இலங்கை மின்சார விநியோக தனியார் நிறுவனத்தின் (LECO) பணிப்பாளர் பொறியியலாளர் விஜயதுங்க சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, உள்ளூராட்சி சபைகள் இதற்கான மின்சாரக் கணக்கையும் மீற்றர் இணைப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 6 கிலோமீட்டர் தூரத்திற்கான மதிப்பீட்டறிக்கையைத் தயாரித்து வழங்க முடியும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இதன்போது குறிப்பிட்டார்.
பின்தங்கிய பகுதியான இப்பிரதேசத்திற்கு மின்சார வசதியை வழங்குவதற்காக மின்வலு அமைச்சினூடாக விசேட நிதியொன்றை ஒதுக்கீடு செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் தலைவர் ஜயசிறியிடம் அமைச்சர் விளக்கம் கோரியபோது, தாம் குறித்த 6 கிலோமீட்டர் வீதியை நேரில் பார்வையிட்டதாகவும் அங்கு வீடுகள் எதுவும் இல்லாதபோதிலும் மின்சார இணைப்பை வழங்குவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த அமைச்சர் அநுர கருணாதிலக்க, பொதுமக்களினதும் விவசாயிகளினதும் நலனைக் கருத்திற்கொண்டு அல்லிமுல்லை – மல்கம்பட்டி வீதிக்கான மின்சார இணைப்புப் பணிகளை மின்வலு அமைச்சின் ஊடாக விரைவாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.