Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் உயிரிழப்பு 25ஆக உயர்வு

Posted on July 6, 2026 by Admin | 173 Views

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக கைதிகளுக்கிடையே நீடித்து வரும் வன்முறை மோதல்கள் இன்று காலை மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்பு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் சிறைச்சாலை வளாகத்திற்குள் திடீரென வெடித்த இந்த மோதல் நிலைமை பாதுகாப்புப் படையினரின் கடுமையான முயற்சிகளுக்குப் பின் நேற்று இரவுக்குள் ஓரளவுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் இன்று காலை கைதிகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்ட தருணத்தில் கைதிகள் மீண்டும் வன்முறையில் குதித்ததால் நிலைமை விபரீதமாக மாறியது. வன்முறையைக் கட்டுப்படுத்த முற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் கைதிகள் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட இந்த மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அஞ்சப்படுகிறது.

தற்போது சிறைச்சாலையைச் சுற்றிலும் ,உட்பகுதியிலும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் வன்முறை வெடிப்பதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இந்த பாரிய வன்முறைச் சம்பவம் குறித்து பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிர மேல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.