Top News
| அட்டாளைச்சேனை நாவலடி வீதியில் மரணப் பொறியாக மாறியுள்ள வடிகான்- கண்டும் காணாமல் இருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை | | பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு |
Aug 16, 2026

சம்மாந்துறையில் டெங்கு அச்சுறுத்தலை ஒழிக்க முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி களத்தில்

Posted on July 19, 2026 by Admin | 104 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர் )

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் ‘டெங்கற்ற கிழக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பான விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம் நேற்று (18) இரவு சம்மாந்துறையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூரின் தலைமையில் அவரது இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.

நாட்டின் பல பிரதேசங்களிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் இதனைத் துரிதமாகக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இளைஞர்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் சிரமதானப் பணிகளை முன்னெடுப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் சுகாதாரத் தரப்பினருடன் இணைந்து ‘டெங்கற்ற கிழக்கு’ செயற்றிட்டத்தை எவ்வாறு வினைத்திறனாக அமுல்படுத்துவது என்பது தொடர்பிலும் முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இவ்விசேட ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.எம். முஷர்ரப், தேசியப் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், அம்பாறை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர்.

சம்மாந்துறை பிரதேச உயர்பீட உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் அர்சாத் இஸ்மாயில், சம்மாந்துறை மத்திய குழுச் செயலாளர் அசாருதீன் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.