Top News
| அட்டாளைச்சேனை நாவலடி வீதியில் மரணப் பொறியாக மாறியுள்ள வடிகான்- கண்டும் காணாமல் இருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை | | பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு |
Aug 16, 2026

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அட்டாளைச்சேனை எஸ்.எல்.ஏ.ஹலீம் நீக்கம்

Posted on July 24, 2026 by Admin | 114 Views

(ஒலுவில் செய்தியாளர்- மனாப்)

கட்சி ஒழுக்கத்தை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ. ஹலீம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றஊப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரைக்கமைய கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடிதத்தை அவருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 2026 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற ‘பாதுகாப்பான சமூகத்தை நோக்கிய டெங்கில்லா கிழக்கு’ வேலைத்திட்டத்தின் பூர்வாங்க ஏற்பாட்டுக் கூட்டத்தில் திடீரென கலந்துகொண்ட எஸ்.எல்.ஏ.ஹலீம் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் கட்சி ஒழுக்கத்தை மீறும் வகையிலும் நடந்துகொண்டதாக கட்சியின் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளுக்கு அமைய இவர் மீது ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை அறிவித்தல் கிடைத்து பதினான்கு (14) நாட்களுக்குள் எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒழுக்காற்று விசாரணைகள் முழுமையாக நிறைவடையும் வரை ஹலீமின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிடப்பட்டுள்ள 14 நாட்கள் காலக்கெடுவுக்குள் எழுத்துபூர்வமான விளக்கத்தைச் சமர்ப்பிக்கத் தவறினால் அவர் மீது மேலதிக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

கட்சிக்குள் ஒழுக்கத்தையும் நற்பெயரையும் பேணுவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருப்பதை இந்தத் துரித நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.