(அட்டாளைச்சேனை செய்தியாளர் – ஹபீஸ்)
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் “டெங்கற்ற பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தொனிப்பொருளின் கீழ் மாணவர்களுக்கிடையிலான விசேட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்த வேலைத்திட்டம் முன்னெடுப்பு.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்துவரும் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் நேற்று (31) அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அண்மைக் காலமாக நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நுளம்பின் பெருக்கம் காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த 27 பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பாடசாலை மாணவர்கள் ஊடாக வீடுகளுக்கும் சமூக மட்டத்திற்கும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வை வினைத்திறனாகக் கொண்டு செல்வதன் அவசியம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதற்கமைவாக “டெங்கற்ற பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தொனிப்பொருளின் கீழ் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கிடையிலான விசேட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்துவது எனவும் இப்போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பெறுமதியான பரிசில்களை வழங்குவதற்கும் இதன்போது ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அரபாத், அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி , பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு டெங்கு ஒழிப்பிற்கான தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




