Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கையினை ஏற்று பொத்துவில் நீர்ப்பாசன கட்டிடத்திற்கு 20 மில்லியன் நிதியினை ஒதுக்க ஆளுநர் பணிப்புரை

Posted on August 6, 2026 by Admin | 89 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

பொத்துவில் மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலயத்தின் இரண்டாம் மாடி நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 20 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பணிப்புரை விடுத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த விசேட கோரிக்கைக்கு அமைவாகவே ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்டச் செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாராச்சியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோர் தலைமையில் அம்பாறை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தனது முன்மொழிவினை முன்வைத்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை,

“நான் கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி இரண்டு மாடிகளைக் கொண்ட மாகாண நீர்ப்பாசனக் காரியாலயத்தை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். தற்போது அக்கட்டிடத்தின் ஒரு மாடி மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் மாடியின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு 20 மில்லியன் ரூபா மேலதிகமாகத் தேவைப்படுகின்றது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பான கோரிக்கையை நான் முன்வைத்திருந்தேன். அப்போது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதனைச் சமர்ப்பிக்குமாறும், ஒருவேளை ஆளுநர் இதற்கான நிதியை வழங்காவிட்டால் அது தொடர்பில் அறிக்கை அனுப்புமாறும் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே, பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நலன் கருதி, இக்காரியாலயத்தின் தொடர் வேலைகளுக்கான விசேட நிதியை ஆளுநர் அவர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையினைத் தொடர்ந்து, குறித்த திட்டம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிராந்தியப் பணிப்பாளரிடம் ஆளுநர் கோரினார்.
இதற்குப் பதிலளித்த கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் திரு. ராஜகோபால், “பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மாகாண நீர்ப்பாசனக் காரியாலயத்தின் ஒரு மாடி நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. இதன் இரண்டாம் மாடியைப் பூர்த்தி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதைப் போன்று 20 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது” என உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, 2027ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 20 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கி, பொத்துவில் மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலயத்தின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்யுமாறு பிராந்தியப் பணிப்பாளர் ராஜகோபாலுக்கு அதிகாரபூர்வமாகப் பணிப்புரை விடுத்தார்.

தனது கோரிக்கையை ஏற்று, விவசாயிகளின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 20 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்த கிழக்கு மாகாண ஆளுநருக்கு, பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இக்கூட்டத்தில் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.