Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உதுமாலெப்பை எம்.பியின் நிதியில் இறக்காமத்திற்கு ரூபா 14 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் விநியோகம்!

Posted on August 11, 2026 by Admin | 178 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 14 இலட்சம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம். முஸ்மி தலைமையில் நேற்று (10) நடைபெற்ற இந்நிகழ்வில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முதற்கட்டமாக இந்த உதவிகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

தற்போதைய சவாலான பொருளாதாரச் சூழலில் அன்றாடத் தொழில்களை முன்னெடுக்கச் சிரமப்படும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதும், பிரதேசத்தின் விவசாய, மீன்பிடி உற்பத்திகளை அதிகரிப்பதுமே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதற்கமைவாக, பயனாளிகளுக்கு பெறுமதியான மீன்பிடி வலைகள், மண்வெட்டிகள், கிருமிநாசினி தெளிக்கும் பம்ப் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இறக்காம பிரதேச மீனவர்களுக்காக ரூபா 05 இலட்சம், வரிப்பத்தான்சேனை பிரதேச விவசாயிகளுக்காக ரூபா 05 இலட்சம், குடுவில் பிரதேச மீனவர்களுக்காக ரூபா 05 இலட்சம் மொத்தமாக இறக்காம பிரதேச பிரிவுக்குட்பட்ட ரூபா 14 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இந்த முதற்கட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்தீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.ஏ. அன்சார், முன்னாள் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ. நைசர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் உப தவிசாளர் என்.எம். ஆஷிக், எம்.என். நாசர், எஸ்.எல்.எம். றஜா , இறக்காம பிரதேச அமைப்பாளர் எஸ்.எல்.நிசார் ஆசிரியர் , வரிப்பத்தான்சேனை பிரதேச அமைப்பாளர் முன்னாள் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.நைசர், இறக்காமம் பிரதேச அமைப்பாளர் எஸ்.எல்.நிசார் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

அத்துடன் மீனவர் சங்கத் தலைவர் என். நிஸ்வி, பலநோக்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐ. நஜீமா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், உள்ளூர் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.