(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ‘ஹிஜாப்’ தடை விவகாரமானது பெரும் கவலையளிப்பதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள், தமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஹிஜாப் அணிந்து கடமைக்கு சமூகமளிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தடை விதித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள், சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைப்போர் மத்தியில் பெரும் அதிருப்தியையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான இத்தகைய செயற்பாடுகளின் பின்புலத்தை ஆராய்ந்து, அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், நாம் எதிர்பார்க்கும் இன ஐக்கியத்திற்கு பாரிய குந்தகம் ஏற்படலாம்.
இந்த முரண்பாடான செயற்பாட்டை முஸ்லிம் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாத்திரமன்றி, தமிழ் சமூகத்தில் இன நல்லுறவை விரும்பும் தலைமைகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன. இது, எமது சமூகங்களை இனவாதத்தால் பிரிக்க முடியாது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
இதேவேளை, ஆளுங்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, இந்த ஹிஜாப் பிரச்சினையை உரிய தரப்பினருடன் பேசி சுமூகமாகத் தீர்த்துவிட்டதாகவும், சமூக ஆர்வலர்கள் இதனை சமூக வலைத்தளங்களின் ஊடாக ஊதிப்பெருப்பித்துப் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
எனினும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளரால் 2026.08.14 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட கடிதத்தில், குறித்த சுகாதாரப் பணியாளர்கள் பொது நிர்வாக மற்றும் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சீருடையை அணியத் தவறினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றிய ஐந்து முஸ்லிம் பெண் ஆசிரியைகளின் அபாயா விவகாரத்தில், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றத்தின் ஊடாக நீதி நிலைநாட்டப்பட்டு, அவர்கள் தமது கலாசார ஆடையுடன் கடமையாற்ற அனுமதி பெற்றமை இங்கு நினைவுகூரத்தக்கது.
எனவே, இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்பும் என்ற மக்களின் அதீத நம்பிக்கையுடன் தோற்றம் பெற்றுள்ள தற்போதைய அரசாங்கமும், சுகாதார அமைச்சும் உடனடியாகத் தலையிட்டு, குறித்த முஸ்லிம் பெண் பணியாளர்கள் தமது கலாசார ஆடையுடன் தொடர்ந்தும் எவ்வித இடையூறுமின்றி கடமையாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.