(அட்டாளைச்சேனை செய்தியாளர்- வாஜித்)
பார்வையற்றோருக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட ‘ஸ்மார்ட்’ கண்ணாடியை உருவாக்கிய கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் முஹம்மட் மக்பூல் மிஷாரிஃப் அஹமட் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறும் புகழ்பெற்ற ‘சிலிக்கான் வெலி’ சர்வதேச கண்டுபிடிப்பு மற்றும் புதுமை விழா (Silicon Valley International Invention & Innovation Festival – SVIIF) 2026 இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இவர் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கண்டுபிடிப்பாளர் ஆணைக்குழுவின் (SLIC) மூலம் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) அனுசரணையில் நடைபெறும் இந்த சர்வதேச நிகழ்வில் இணையவழியூடாக (Online) பங்கேற்கவுள்ளார்.
மிஷாரிஃப் அஹமட்டினால் வடிவமைக்கப்பட்ட “பார்வையற்றோருக்கான AI தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடி அமைப்பு” (Smart Spectacle System Utilizing AI) இந்த சர்வதேச விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினிப் பார்வை (Computer Vision) ஆகிய நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்ணாடியானது, பார்வையற்றோரின் அன்றாட வாழ்க்கையையும் பாதுகாப்பையும் கணிசமாக மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்ணாடியின் சிறப்பம்சங்கள்:
நாணயத்தாள்களை துல்லியமாக அடையாளம் காணுதல்.
தேசிய மட்டத்தில் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ள இளம் கண்டுபிடிப்பாளரான மிஷாரிஃப் அஹமட், இதற்கு முன்னதாக ‘கலாம் கோல்டன் விருது – 2025’ (Kalam’s Golden Award 2025) உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது இந்தச் சாதனை, இலங்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமையையும் புத்தாக்கச் சிந்தனையையும் சர்வதேச அரங்கில் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. சமூகத்தின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இப்புதிய கண்டுபிடிப்பிற்கும், நாட்டின் பெயரை உலக அரங்கில் ஒளிரச் செய்துள்ள இந்த இளம் சாதனையாளருக்கும் பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.