Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை

Posted on August 30, 2026 by Admin | 140 Views

அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான முறையான தயார்நிலையில் அரசாங்கம் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக முதலாம் மற்றும் ஆறாம் தரங்களில் இந்தச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள போதிலும், அதற்கான ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகள் இன்னும் மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எதிர்வரும் ஆண்டு முதல் முதலாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இந்தச் சீர்திருத்தங்கள், கடந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டு பின்னர் அமுல்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன.

அதேபோன்று, புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்காக விசேட கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார். ஆனால், அக்கொள்கை வரைபு இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பது எவருக்கும் தெரியாது. அது மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படவுமில்லை, அது குறித்து எவ்வித உரையாடல்களும் இடம்பெறவுமில்லை.

எந்தவொரு தெளிவான திட்டமுமின்றி, கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்ல முற்படுகிறது. தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறைச் சிக்கல்கள் நிலவி வருகின்ற நிலையில், அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இவ்வாறான சீர்திருத்தங்களை அவசர அவசரமாகக் கொண்டுவருவது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். எனவே, இவ்வாறான செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.