தற்போதைய அரசாங்கத்தின் ஆணிவேராகவும் ஜனநாயகத்தின் தூணாகவும் விளங்கும் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட அரச கூட்டமொன்றில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா நடந்துகொண்ட விதம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தீகவாபி மற்றும் பொன்னம்வெளி பிரதேச காணி உரிமையாளர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை துரிதமாக வழங்குவது தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (15) காலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா, எம்.எஸ்.உதுமாலெப்பை, காணி ஆணையாளர் ஜி.டீ.நடீக மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மக்களின் நலன் சார்ந்த இக்கூட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் செய்திகளைச் சேகரிப்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு காணி ஆணையாளர் அனுமதி வழங்கியிருந்தார். எனினும் அரச அதிகாரியின் அந்த அனுமதியைத் துளியும் மதிக்காத பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தேசிய ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் செய்திகளைச் சேகரிக்க விடாது தடுத்ததுடன் சபையிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கும் பகிரங்கமாக முயற்சிகளை மேற்கொண்டார். இது அங்கு குழுமியிருந்த அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கும் அவர்களது செயற்பாடுகளை , கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே மிகப்பெரிய பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்துள்ளனர் என்பது நாடறிந்த உண்மை. தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் கூட ஊடகங்களை பெரிதும் மதித்து அதனூடாகவே தங்களது அபிவிருத்திப் பணிகளையும் திட்டங்களையும் மக்களிடம் வெளிப்படையாகக் கொண்டு சேர்த்து வருகின்றனர். இவ்வாறானதொரு ஆரோக்கியமான சூழலில் இதே அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய பட்டியல் எம்.பி கட்சியின் அடிப்படை ஜனநாயகப் பண்புகளுக்கு முற்றிலும் முரணான வகையில் செயற்பட்டு வருவது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.
ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அவர் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டியவர். இந்தப் பிராந்திய மக்களின் நீண்டகாலத் தேவைகளை அறிந்து ஊர்களின் அபிவிருத்திகளை முன்னெடுத்து தன்னாற் முடிந்த உச்சக்கட்ட சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. அதனைச் செவ்வனே செய்து மக்களின் நன்மதிப்பைப் பெறவேண்டிய அவர் அதனை விடுத்து இவ்வாறு அதிகார தோரணையில் ஊடகங்களையும் ஊடக தர்மத்தையும் மீறி நடந்துகொள்வதை எந்தவொரு ஜனநாயகப் பிரஜையாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என சிவில் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கரையோரப் பிரதேசங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களில் ஊடகவியலாளர்களை வெளியேற்றுவதையே அவர் அண்மைக்காலமாக வாடிக்கையாகக் கொண்டுள்ளார். மக்களின் வரிப்பணத்தில் மக்கள் நலன் சார்ந்து நடைபெறும் கூட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் ஊடகவியலாளர்களை எம்.பி ஒருவர் சபையிலிருந்து வெளியேற்றுகின்றார் என்றால் “காணி விநியோகம் போன்ற முக்கிய விடயங்களில் அவர் எதை மூடி மறைக்க முற்படுகின்றார்? என்ற யதார்த்தபூர்வமான சந்தேகம் பொதுமக்கள் மத்தியிலும் வலுவாக எழுந்துள்ளது.
அபிவிருத்திக்காக உழைக்க வேண்டிய ஒரு மக்கள் பிரதிநிதி, அரச அதிகாரிகளின் கடமைகளில் தலையிட்டு ஊடக சுதந்திரத்தை நசுக்கும் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுவது முற்றிலும் பிழையானது என்பதை அங்கு பிரசன்னமாகியிருந்த அதிகாரிகளே முணுமுணுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
ஊடக தர்மத்தை மீறி தான்தோன்றித்தனமாகச் செயற்படும் இவ்வாறான மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடம் உரிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இப்பிரதேசத்தில் ஜனநாயக மாண்புகளையும் ஊடக சுதந்திரத்தையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தினதும் எதிர்பார்ப்பாகும்.