நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தொடங்கப்பட்டது. இதன் போது அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் தொழுநோயை முழுமையாக ஒழிப்பதற்கான செயல் வரைபடமும் வெளியிடப்பட்டது.
இம்மாநாடு இலங்கையின் பொது சுகாதார வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் உரையாற்றியபோது, “இலங்கை 1995 ஆம் ஆண்டிலேயே தொழுநோயை பொது சுகாதார அச்சுறுத்தலாக இருந்து ஒழித்திருந்தாலும், நோயை முற்றிலும் நீக்குவதற்கான முயற்சி இன்னும் தொடர்கிறது. ஆண்டுதோறும் சுமார் 1,500 முதல் 2,000 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். அதில் சுமார் 10 சதவீதம் பேர் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்,” என தெரிவித்துள்ளார்.