Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

கொழும்புக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Posted on November 30, 2025 by Admin | 242 Views

கொழும்புக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் குறிப்பாக களனி மற்றும் பியகம போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் வெள்ள அபாயத்திற்கும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் ஆய்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார் கூறியதாவது, ஹன்வெல்லில் நீர்மட்டம் தற்போது 10.8 அடி அளவில் உள்ளது. “எமது கணிப்பின்படி, ஹன்வெல்லில் உயர்ந்த பட்ச நீர்மட்டம் 10.88 அடியாக இருக்கக்கூடும்,” என அவர் குறிப்பிட்டார்.

நாகலகம் வீதியின் நீர்மட்டம் சுமார் 7 அடி வரை உயர்ந்துள்ளது. களனி ஆற்றின் மேலிருந்து கீழ் நோக்கி வரும் நீர் காரணமாக, ஹன்வெல்லில் நீர்மட்டம் உச்சத்தை அடையும் போது இடைப்பட்ட பகுதிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கலாம். இதனால், கொழும்புக்கு அருகிலுள்ள பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், துனுமலே நீர்மானியில் நீர்மட்டம் இன்னும் ‘பெரும் வெள்ள’ நிலையில் உள்ளதால், கம்பஹா, ஜா-எல், வத்தளை, கந்தானை போன்ற தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும். மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மகா ஓயா நீர்த்தேக்கத்தின் நிலையும் ‘அதி தீவிர வெள்ள’ நிலையில் உள்ளது. இது தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் அபாயத்தைக் குறிக்கிறது.

மேலும், மாவிலாறு அணைக்கட்டு உடையும் அபாயம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், நீர்மட்டம் மிகவும் உயர்வதால் அந்த இடத்திற்கு சென்று பரிசோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாவிலாறு, கின்னியா, மூதூர், சூரியபுர பகுதிகளில் வெள்ளம் பரவி வருகின்றது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் திருகோணமலைக்கு அருகிலுள்ள கீழ்தரப்புப் பகுதிகளில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதாயுள்ளது.

மேல் ஆற்றுப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்தாலும், கீழ் பகுதிகளில் இன்னும் நீர் அதிகமாக உள்ளது. நீர்மட்டம் குறையும் போது ஏற்படும் ஆபத்துகள், அதிகரிக்கும் போது ஏற்படும் ஆபத்துகளுடன் சமமானவை என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் வெள்ளத்தைக் விளையாட்டாக சென்று பார்க்கவோ, நீரில் விளையாடவோ, வெள்ளம் மூடிய வீதிகளை பயன்படுத்தவோ கூடாது எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.