Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கவும் – உதுமாலெப்பை MP கோரிக்கை

Posted on June 5, 2025 by Admin | 292 Views

(அபூ உமர்)

2025 ஜூன் 4ம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நானயக்கார தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய MP. உதுமாலெப்பை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்த சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டுமெனக் கூறினார்.

அவரது கூற்றுப்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்தின் முன் நிறுத்துவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்திருந்தார். பின்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுப்பார் என அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்தவொரு முக்கியமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

இது தொடர்பாக நீதி அமைச்சு உடனடியாக விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதுடன் மதப்பிரச்சினை மற்றும் இனவாதப் பேச்சுக்களையும் எச்சரித்தார்

தொடர்ந்து எம்.எஸ்.உதுமாலெப்பை உரையாற்றுகையில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான தகவல்கள் பரப்பி, அரசியல் ஆதாயம் தேடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் எம்.பி. உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஆளுங்கட்சியின் பிரதியமைச்சரை “பயங்கரவாதி” என இனவாதக் கருத்தினை முன்வைத்தவர் தொடர்பாக நீதித் துறையால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென அவர் கேள்வி எழுப்பினார்.

“தேசிய ஒருமைப்பாடு குறித்து நாம் பேசும் நேரத்தில், ஆளுங்கட்சியின் பிரதி அமைச்சர் தொடர்பாக தெரிவித்த இனவாதக் கருத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நாங்கள் எவ்வாறு தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நானயக்கார பதிலளிக்கையில்….

பிரதியமைச்சர் தொடர்பாக வெளியான கருத்துகள் குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதில் அளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.