Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு

Posted on December 16, 2025 by Admin | 355 Views

கிழக்குத் திசையில் உருவாகியுள்ள காற்றழுத்தச் சுழற்சி காரணமாக நாட்டின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் தாக்கத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களிலும் தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (16) அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகள், வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அதேபோல் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.