(பாலமுனை செய்தியாளர் சப்னி)
இயற்கை அனர்த்தங்கள் மனித வாழ்க்கையை உலுக்கும் தருணங்களில் அரசியல் எல்லைகளைத் தாண்டி மனிதநேயமே முதன்மை பெற வேண்டும் என்பதைக் கூறும் உணர்வுபூர்வமான குரல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆறாவது சபை அமர்வில் ஒலித்தது.
அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடானது பாராட்டிற்குரியது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆறாவது சபை அமர்வு கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்களின் தலைமையில் 2025.12.17ம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற போது கெளரவ உறுப்பினர் எம்.ஏ.அன்ஸில் அச்சபைகளின் மனிதநேய செயல்களை மனதாரப் பாராட்டினார்.
இச் சபை அமர்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான எம்.ஏ.அன்ஸில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று தமது அரசியல் வேறுபாடுகளை களைந்து பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் உண்மையில் முன்மாதிரியாக அமைந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.
இவ் உள்ளூராட்சி சபைகள் போன்று எமது சபையும் எம்மிடம் உள்ள இயந்திரங்கள், ஆளணியினர் போன்ற அனைத்து வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி அம்மக்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் உரையாற்றுகையில்,
இயற்கை அனர்த்தங்கள் பிரதேசங்களையும், அரசியல் நிறங்களையும் பார்ப்பதில்லை. அவை மனித உயிர்களை மட்டுமே வதைக்கின்றன. ஆகையால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் தருணங்களில் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமது வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி மனித உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு எமது சபையின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கெளரவ உறுப்பினர் எம்.ஏ.அன்ஸில் அவர்களின் நியாயமான இக்கருத்துக்கு கெளரவ தவிசாளர் உரையாற்றுகையில்,
பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை நாங்கள் உணர்ந்தவர்கள்.இயற்கை அனர்த்தம் இடம் பெற்ற காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் சீர்குலைய சபை உறுப்பினர்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அட்டாளைச்சேனை , இறக்காமம் , பொத்துவில் பிரதேச சபைகளின் கனரக வாகனங்கள் இன்றும் அம்மக்களுக்கான பல உதவிகளை செய்து வருவதுடன் நானும் எமது சபையின் சில உறுப்பினர்களும் தனிப்பட்ட வகையில் அப்பிரதேசங்களுக்கு சென்று அவர்களுக்கான உதவிகளை செய்தோம். ஆகவே, எமது சபையின் வளங்களைப் பயன்படுத்தி அம்மக்களுக்கு உதவுவதற்கான பணிகளை நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என கெளரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தெரிவித்தார்.